
சென்னையில் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று (மார்ச் 7) மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர் விலை குறைவுக்குப் பிறகு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று (மார்ச் 7) மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர் விலை குறைவுக்குப் பிறகு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு போன்ற பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு மற்றும் உலக பங்குச் சந்தை நிலவரம் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகளவில் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் தங்கம் விலையில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி வருகின்றன என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான பதற்றம் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
முன்னதாக மார்ச் 2 அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்தது. அதன்பின் மார்ச் 3 அன்று ரூ.1,560, மார்ச் 4 அன்று ரூ.2,120, மார்ச் 5 அன்று ரூ.640, மார்ச் 6 அன்று ரூ.1,280 என தொடர்ந்து விலை சரிந்தது.
இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும், ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.784 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,31,344-க்கு விற்பனையாகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனையாகிறது.

