அவரது அரசியல் பலம் என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வாக்கு வங்கி. 7% குருமி கோரி சமூகங்கள், 26% எம்பிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என மொத்தம் 33% வாக்குகள் என்றுமே நிதிஷ் குமாருக்குதான். இது தவிர மகா தலித்துகள் மற்றும் பெண்களின் வாக்குகளையும் தேர்தல் தவறாமல் அறுவடை செய்துவிடுகிறார் நிதிஷ்.
நிதிஷ் குமாரின் நிர்வாக முறை என்பது பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன்களை மையமாக கொண்டது. ஜீவிகா தீதி, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி ஆகியவை அவரது முதன்மை திட்டங்கள் மட்டுமின்றி மிகவும் பிரபலமானவை. இது மட்டுமல்லாமல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி பெண் வாக்காளர்களின் ஆதரவு தளத்தை உறுதி செய்து கொண்டவர்.
பஞ்சாயத்துக்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% ஒதுக்கீட்டையும் பெண்களுக்கு 50% ஒதுக்கீட்டையும் வழங்கி அவர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டவர் நிதிஷ் குமார்.
மூத்த குடிமக்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியது, அங்கன்வாடி மற்றும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியது நிதிஷின் கடைசி நிமிட ஸ்டன்ட். இதுமட்டுமின்றி, தேர்தல் தேதி அறிவித்த நாளன்று காலையில் 16 லட்சம் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய், ஒரு கோடியே 21 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்க 10,000 ரூபாய், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகையாக ₹1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் நிதிஷ் குமாரின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவதைத்தான் மதிப்பீட்டு எண்கள் காட்டுகின்றன. விருப்பமான முதலமைச்சராக நிதிஷின் ஒப்புதல் மதிப்பீடுகள் 2020 ஆம் ஆண்டில் 37% ஆக இருந்தது. இது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 சதவிகிதமாக சரிந்துவிட்டது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் அதனை எதிர்த்து 17 ஆண்டுகளாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இது நடந்தது 2013ஆம் ஆண்டு. பின்னர் 2015ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்து வெற்றி பெற்றார். 2017ஆம் ஆண்டில் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதலமைச்சரானார்.
2022 ஆம் ஆண்டில் பாஜகவுடனான உறவை துண்டித்து கொண்டு மகாகத்பந்தன் கூட்டணியில் ஐக்கியமாகி முதலமைச்சர் அரியணையில் ஏறினார். 2024ஆம் ஆண்டு ஜனவரியில் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். ஒவ்வொரு முறையும் அவர் கூட்டணியை மாற்றும் போதும் அவர் முதலமைச்சர் பதவியிலேயே தொடர்கிறார். இதனால் தனது அரசியல் லாபத்திற்காக அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் தலைவர் என்ற இமேஜை பெற்றுள்ளார்.
தற்போதைய தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் அதிக இடங்களை கைப்பற்றி அவருக்கு சமமான அல்லது சவாலான ஒருவரை கொண்டுவர பாஜக திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பிகார் என்.டி.ஏ. கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் தான் முதலமைச்சரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, ““யார் முதலமைச்சர் என தேர்வு செய்வதற்கு நான் யார்? கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
October 17, 2025 9:04 PM IST

