இராகவன் கருப்பையா – சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் பிரபலமான ‘அக்கா நாசி லெமாக்’ கடையின் உரிமையாளர் சங்கீதா தற்போது அத்தொழிலை மேலும் விரிவாக்கம் செய்து அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமான் புஞ்சாக் ஜாலிலில் உள்ள அவருடைய ‘நாசி லெமாக்’ கடையைப் பற்றி அந்த சமயத்தில் பலரால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து தெற்கே சிங்கப்பூர் வரையிலும் கூட அது பிரபலமானது நாம் அறிந்ததே.
அந்த சமயத்தில் அவருடைய புகழை பாராட்டி ரமணன் தலைமையிலான ‘மித்ரா’வைச் சேர்ந்த ஒரு குழ, அங்கு திடீர் பிரவேசம் செய்து சங்கீதாவுக்கு சில தளவாடங்களை வழங்கியது.
“நான் ‘மித்ரா’விடம் உதவி கேட்கவில்லை. ஆனால் அவர்களே வந்து குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் 2 சமையல் பாத்திரங்களையும் வழங்கிச் சென்றார்கள்.”
“எனினும் அச்சமயத்தில் எனக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது, தொழில் செய்வதற்கு நிரந்தரமான ஒரு இடம்தான்,” என்றார் சங்கீதா. தனது கடையை கார் நிறுத்துமிடத்தில் அமைத்திருந்ததால் பல்வேறுத் தரப்பினரிடமிருந்து பல வகையான இன்னல்களுக்கு அவர் ஆளானார்.
கடந்த ஆண்டு மத்தியில் அவர் எதிர்நோக்கிய சிரமங்களைக் கண்டறிந்த நகராண்மைக்கழக அதிகாரிகள் உடனே களமிறங்கி அவருக்கு நிரந்தர இடமொன்ற வழங்க ஏற்பாடு செய்தனர்.
அவர் தொழில்புரிந்த இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த அக்கழகத்தின் கடைத் தொகுதியில் அவருக்கு இடமளித்தனர்.
“அவர்கள் எனக்கு 2 கடைகளை வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அது மட்டுமின்றி அவற்றுக்கான வாடகையான மாதம் ஒன்றுக்குத் தலா 250 ரிங்கிட்டையும் அந்த அதிகாரிகள் முதல் 3 மாதங்களுக்கு தள்ளுபடி செய்தார்கள்.”
“இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. எதுவாக இருந்தாலும் எங்களிடம் நேரடியாக வந்து புகார் செய்யுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,” என்று அவர்கள் கூறியது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது,” என்று சங்கீதா கூறினார்.
நிம்மதியாக தொழில் செய்வதற்கு இடம் தற்போது விசாலமாக உள்ளதால் அதிகமாக சமைத்து, ‘லாலாமூவ்,’ ‘கிரேப்,’ மற்றும் ‘ஃபூட் பண்டா,’ போன்ற சேவைகளை பயன்படுத்தி உணவு வினியோகம் செய்ய முடிகிறது என்றார் அவர்.
கடந்த ஆண்டு கணவரின் தீடீர் மரணம் தனக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் அந்த சோகத்திலிருந்து விரைவில் மீண்டெழுந்து தொழிலைத் தொடருகிறார் 35 வயதுடைய சங்கீதா.
‘நாசி லெமாக்’ தொடர்பான உணவு வகைகள் மட்டுமின்றி இதர உணவுகளையும் சமைத்து வெளியே விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ‘கேட்டரிங்'(Catering) செய்யும் அவருக்கு, இந்தியர்களுக்கு நிகராக சீன சமூகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பெருமளவில் ஆதரவு வழங்குகின்றனர்.
தனது வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திராதபடி மின்னல் வேகத்தில் சுறுசுறுப்பாக உணவுப் பொட்டலங்களைக் கட்டும் சங்கீதா, அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தனிச் சிறப்பு.
அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு சுவையான உணவு ஒரு புறமிருக்க, இந்த பாசமிகு சேவைதான் அவருக்கு உருதுணையாக உள்ளது என்றால் அது மிகையில்லை.
பெரிய அளவில் உணவகம் ஒன்றைத் திறக்கும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை எனும் போதிலும், கையிலிருக்கும் தொழிலை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மேலும் சிறப்பாக செய்வதே தனது நோக்கம் என்கிறார் இந்த சிங்கப்பெண்.