பிரிட்டிஷ் பாராளுமன்ற மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறையை பின்பற்றுகிறோம். மக்களவை என்பது நேரடி தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்டது. மாநிலங்களவைக்கு நேரடி தேர்தல் கிடையாது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்தின் அதன் மாநிலச் சட்டமன்ற பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஒரு நபர், ஒரு வாக்கு’ (One Person, One Vote) என்பது இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படை. அதன்படி, தேர்தலில் ஒரு கோடீஸ்வரர் அளிக்கும் வாக்கிற்கும், ஒரு ஏழை அளிக்கும் வாக்கிற்கும் ஒரே மதிப்புதான். சாதி, மதம், கல்வி, சொத்து கணக்கின் அடிப்படையில் ஒருவருடைய வாக்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படக் கூடாது. இதற்காகவே ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப மாநிலங்களின் இடங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில், 1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு அமைக்கப்பட்டது. அந்த காலகட்டங்களில் தென்மாநிலங்களில் மக்கள் தொகை மிகுதியாக இருந்தது. அதனால், மக்கள்தொகை அடிப்படியில் தொகுதி சீரமைப்பை எதிர்க்கவில்லை. அதன்பின், குடும்ப கட்டுப்பாட்டைப் பின்பற்றியதன் விளைவாக மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. உத்தரப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மத் திய பிரதேசம் ஆகிய இந்தி மொழி வடமாநிலங்களில் மக்கள் தொகை கூடுதலாக இருந்தது/இருக்கிறது. மக்கள் தொகை அதிகமாக இருக்கிற காரணத்தினால், தொகுதி வரையறை செய்யும் போது அவர்களுக்கு கூடுதலாக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும். ஆனால், தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
மாநிலங்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவே மாநிலங்களவை (Rajya Sabha) உருவாக்கப்பட்டது. மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வலுவான ‘கூட்டாட்சி அமைப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரு அவைகளும் சமமான அதிகாரத்தை கொண்டுள்ளன. உதாரணமாக, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்க தீர்மானம் (Impeachment Motion), அவசர நிலைப் பிரகடனத்திற்கு (Emergency) ஒப்புதல் அளித்தல், அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் இரு அவைகளுக்கும் சமமான அதிகாரம் உண்டு.
இருப்பினும், அமைச்சரவை என்பது மக்களவைக்கு மட்டும் தான் கூட்டுப் பொறுப்புடையதாக இருக்கும். மாநிலங்களவையால் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவோ அல்லது கவிழ்க்கவோ முடியாது. மேலும், பணம், நிதிச் சார்ந்த மசோதாக்களில் (Money Bill,Finance Bill) மக்களவைக்கே இறுதி அதிகாரம் உள்ளது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும் பட்சத்தில், மாநிலங்களவை இடங்கள் (250) அப்படியே இருந்தால் பல்வேறு சிக்கல்கள் எழுமென அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலாவதாக, சட்டமியற்றவதற்கான அதிகாரம். சட்டமுன்வடிவு (Bill) எதுவும், நாடாளுமன்ற ஈரவைகளிலில் எதிலும் முதலில் கொண்டு வரலாம். இரண்டு அவைகளிகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவேளை, ஏதெனும் ஒரு அவையில் திருத்தங்கள் காரணமாக நிறைவேற்றப்பட வில்லை என்றால் அந்த முன்வடிவு சட்டமானது (Act). இத்தகைய சூழலில், இந்திய குடியரசுத் தலைவர் கூட்டு அமர்வுக்கு அழைப்பு விடுப்பார். கூட்டு அமார்வில் வாக்கெடுப்பு நடத்தப்படும். தற்போது, மக்களவை பதவிகளின் எண்ணிக்கை மட்டும் 850 ஆக உயரும் பட்சத்தில் மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே எந்தச் சட்டத்தையும் ஆளும் கட்சி நிறைவேற்ற முடியும்.
குடியரசுத் தலைவர் பதவி: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு. மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும்போது, மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பும், முக்கியத்துவமும் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், மாநிலங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் (பட்டியல் 2, 3) மத்திய அரசு முடிவெடுக்கும்போது, மாநிலங்களவை பலவீனமாக இருந்தால் மாநிலங்களின் சுயாட்சி கேள்விக்குறியாகும் என்றும் கூறுகின்றனர். மக்களவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், மாநிலங்களவையை ஒரு பெயரளவிலான அவையாக வைத்திருக்காமல், மாநிலங்களின் உரிமைகளை உண்மையிலேயே நிலைநாட்டும் “சக்திவாய்ந்த கூட்டாட்சி அமைப்பாக” (True Federal Institution) மாற்றுவதே ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகாகும் என்று கருத்து தெரிவிக்கின்ற்னர்.

