Last Updated:
“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.
நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள். இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தீர்கள் என்றால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழகத்தினுடைய குரல் நசுக்கப்படுகிறது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அந்தச் செய்தியாளர் சந்திப்பு காணொளியையும் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் அந்த எக்ஸ் பதிவைத் தொடர்ந்து தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமராவ், “தொகுதி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால் – தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “தேசவிரோத திமுகவை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” – அமைச்சர் அமித்ஷா
இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். இந்த விஷயத்தில் அவரை நான் வலுவாக ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகத் தேவையான குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்திய தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.
தென் மாநிலங்களின் முயற்சியை கருத்தில் கொள்ளாமல் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு (delimitation) செய்வது ஜனநாயகத்திற்கோ கூட்டாட்சிக்கோ பொருந்தாது. இதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால் – தேசத்திற்கான நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்.
I totally agree with Thiru Stalin and strongly support him on this. You cannot penalize the Southern states for religiously implementing family planning when the nation needed it the most
To execute delimitation without considering the efforts of the southern states is not in… https://t.co/IjG9wLL7Sv
— KTR (@KTRBRS) February 26, 2025
தேச நிர்மாணத்தில் தெலுங்கானா மற்றும் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, தெலுங்கானா நாட்டின் மக்கள்தொகையில் 2.8% மட்டுமே உள்ளது, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% க்கும் அதிகமாக பங்களிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
February 26, 2025 9:05 PM IST
தொகுதி மறுசீரமைப்பு; “நிதி பங்களிப்பு அடிப்படையில் செய்யுங்கள்” – தெலங்கானா முன்னாள் அமைச்சர் அதிரடி


