Last Updated:
தெலங்கானா சட்டப்பேரவையில் தொகுதி மறுசீரமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, வெளிப்படையான முறையில் அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நியாயமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதனை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும், வெளிப்படையான முறையில் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்த வேண்டும், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படியுங்கள் : ஆக்ரோஷமாக காத்திருந்த இளைஞர்.. ரயிலில் வந்திறங்கிய இருவர்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்!
இதனை வலியுறுத்தி, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு நியாயமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு வெளிப்படையாகவும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள், தண்டிக்கப்படக்கூடாது. எனவே, மக்கள்தொகை மட்டுமே எல்லை நிர்ணயத்திற்கான ஒரே அளவுகோலாக இருக்கக் கூடாது எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் 2014 மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உடனடியாக 119-இலிருந்து 153-ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 27, 2025 7:07 PM IST


