Last Updated:
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது எனத் தெரிவித்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு, ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதேபோல், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்வேறு மாநில முதல்வர்களும், துணைமுதல்வர் டி.கே.சிவக்குமாரும், அரசியல் கட்சித் தலைவர்களும், காணொளியில் பேசிய ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் என அனைவரும், ”மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இந்தத் தண்டனையா?” எனத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேசமயம், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும்போது, பல மாநிலங்களுக்கும், குறிப்பாக தென் மாநிலங்களுக்கு தங்கள் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன? தலைவர்கள் பேசிய கருத்துகள்.. முழு விவரம்
தேசிய முன்னுரிமையாக இருந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகையில் தென்மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே இந்திய அரசியலமைப்பின் 81(2)(a) பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
March 22, 2025 5:01 PM IST


