தைப்பூசத்தின் போது வேல் வேல் என்று முழக்கமிட்டவர்களை பேய் பிடித்தவர்கள், குடி போதையில் இருப்பவர்கள் ஆகியோருடன் ஒப்பிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸம்ரி வினோத்தின் பொல்லாத சேயலை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வன்மையாக கண்டித்தார்.
ஸம்ரியின் இந்த ஒப்பீடு எல்லை மீறியவை, அடாவடியானவை என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கண்டித்தார்.
அவரின் இந்த விமர்சனம் இந்துக்களின் உணர்வுகளை அப்பட்டமாக கேவலப்படுத்தியிருக்கிறார். மேலும் அவரின் இச்செயல் வரம்பு மீறியதும் பொறுப்பற்றதும் அவமதிப்பதாகவும் உள்ளது.
இது 3R எனப்படும் இனம், மதம், அரச குடும்பம் கொள்கைகளை அப்பட்டமாக மீறி இருக்கிறது என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும் ஸம்ரி வினோத் மீது இதுவரை ஏராளமான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இவரின் இந்த சினமூட்டும் கருத்துக்களின் அடிப்படையில் போலீசும் அரசாங்கமும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நாட்டின் சுபிட்சத்திற்கும் அமைதிக்கும் இவரின் அறிக்கை பெரும் மிரட்டலை ஏற்படுத்தி இருக்கிறது. சரியான தண்டனையில் இருந்து இவர் தப்பிக்க கூடாது என்று டத்தோஸ்ரீ சரவணன் எச்சரித்தார்.
ஸம்ரி வினோத் தனது ஃபேஸ்புக் பதிவில் இந்துக்கள் கவடி எடுத்துச் செல்லும்போது பேய் பிடித்தவர்கள் அல்லது போதையில் உள்ளவர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஸம்ரி இந்து மதத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல. ஆகையால் அவர் மீது விரைவாக வழக்குத் தொடரப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
பல இன மக்களிடையே நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த உரிய நடவடிக்கை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


