தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் மாறுபட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியுள்ள பாஜக, அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் அடங்கிய பாஜக குழு சந்தித்தது. இதைத் தொடர்ந்து வினோத் தாவ்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக கர்நாடகத்தில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதே வேளையில் பிரதமருக்கு எதிராக தமிழக அமைச்சர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கண்டனம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோன்று, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, மதவெறி கொண்டவராகக் கருதப்படும் முகலாய அரசர் ஒளரங்கசீப்புடன் பிரதமரை ஒப்பிட்டுப் பேசினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.
அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நாங்கள் வலியுறுத்தினோம் என்றார்.
தேர்தல் ஆணையர்களைச் சந்தித்த பாஜக குழுவில் ஓம் பாடக், சஞ்சய் மயூக் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.