நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில அரசியல் கட்சிகளுக்கு தங்களது தலைமையகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களைப் பராமரிப்பதுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்குவதும் தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டணங்களை செலுத்த முடியாத நிலை
மேலும், சில கட்சி அலுவலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமாக, பல அரசியல் கட்சிகளின் நிதி கையிருப்புகள் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியுதவிகளில் சிலவற்றை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சி நிதியை செலவிடும்போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை உருவாக்க சில கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், எனினும் மற்றொரு தரப்பினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை 85 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

