சட்டங்கள் குறித்த தெளிவு மக்களுக்கு அவசியம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால், எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விேஜதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது மிக முக்கியமான ஜனநாயக அம்சமாகும். நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, கற்பழிப்பு என்பது பெண்ணின் மீதான அத்துமீறல் மட்டுமே. ஆனால், புதிய திருத்தங்கள் மூலம், பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சட்டத்தைப் நிறைவேற்ற முடியும். இங்கு, சட்டப்பூர்வமாகப் பிரிந்த மனைவிக்கு கணவன் செய்யும் பாலியல் வன்முறை கற்பழிப்பாகக் கருதப்படுகிறது. பொலிஸ் காவல் மற்றும் சிறை அல்லது வேறு ஒருவரின் காவலில் இருக்கும் போது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களுக்காக வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், இளவயதினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு சுமார் நான்கு ஆண்டுகளாக ஆய்வு நடத்திய பின்னரே முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட மூலத்தை எதிர்த்து சில தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இது தவிர தேர்தல் திருத்த சட்ட மூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.1994 இல், சந்திரிக்கா மூன்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையை நீக்குவது என்பவையாகும். அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்ட போதிலும், தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தது. அதுவரை, ஜனாதிபதி ஒரு கொலை செய்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடர முடியாமல் இருந்தது. அவை,எவையும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 19 ஆவது திருத்தம் அந்நிலையை மாற்றியது. அதன்படி இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழலை தடுக்க சட்ட அதிகாரம் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி முதல் கீழ்நிலை அதிகாரி வரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிக்கும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது. அந்த ஆணைக்குழு தொடர்பான பல திருத்தங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஊழல் கண்காணிப்பு ஆணைக்குழுவை ஒரு சுதந்திரமான நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்டத்தை இயற்றுவதே இதன் நோக்கமாகும்.

