Last Updated:
தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வலியுறுத்தி போராட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
டெல்லிக்கு போராட வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய இந்தியா கூட்டணி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வலியுறுத்தினர்.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜன்பத், உச்ச நீதிமன்றம், லோக் கல்யான் மார்க் உள்பட 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. போராட்டம் காரணமாக பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுமாறு டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் புறநகர், வெளியூர் செல்லும் 40 விரைவு ரயில் உள்பட 75 ரயில் சேவைகளை ரத்து செய்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. நொய்டா, உத்தர பிரதேசம், கிழக்கு டெல்லியை இணைக்கும் முக்கிய வழித்தடமான சில்லா எல்லை பகுதி சீல் வைக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் 30 இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜன்பத் முதல் கடமை பாதை, ஜந்தர் மந்தர் வரையிலான 4 கிலோ மீட்டர் சுற்றளவில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் 20 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிநவீன தொழில்திறன் கொண்ட 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எப்போதும் ஜனநெருக்கடியில் காணப்படும் சாந்தினி சவுக் மார்க்கெட், பாகிராத் மாளிகையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரயில் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தலைநகரை அடைய வரும் இளைஞர்களை வழியிலேயே மடக்கிப் பிடித்து காவல் துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்தக் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டிருக்கிறார். மும்பையில் இருந்து டெல்லிக்கு போராட வந்த அபிஜித் தீப்கே மற்றும் அவருடன் வந்தவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர். முன்னதாக 1000 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.


