Last Updated:
தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கடந்த ஆண்டில் பாஜக 3142 கோடி ரூபாய் நன்கொடை பெறறுள்ளது. தேர்தல் அறக்கட்டளை என்றால் என்ன? காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன?
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தேர்தல் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
இந்தியாவில் Prudent Electoral Trust, New Democratic, Progressive உள்ளிட்ட மொத்தம் 19 தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளன. இந்த தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் 95 சதவீதத்தை அந்த நிதியாண்டிலேயே கட்சிகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நிதியை பகிர்ந்து அளித்தது தொடர்பான அறிக்கையை 9 அறக்கட்டளைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.
அதன்படி, மொத்தம் 3811 கோடியே 34 லட்ச ரூபாயை கடந்த நிதி ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் திரட்டி உள்ளன. இந்த நிதியில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 3142 கோடியே 65 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த நிதியில் 82.45 சதவீதம் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்த தொகையில் 7.83 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி 298 கோடியே 76 லட்ச ரூபாயை தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ளது.
மாநில கட்சிகளில் மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த நிதி ஆண்டில் 102 கோடி ரூபாயை பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 98 கோடி ரூபாயையும், தெலுங்கு தேசம் கட்சி 44 கோடி ரூபாயையும் தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ளன. ஒடிசாவின் பிஜூ ஜனதா தளத்திற்கு 15 கோடி ரூபாயும், தெலங்கானாவின் பாரதிய ராஷ்டிரிய சமிதிக்கு 10 கோடி ரூபாயும் நன்கொடையாக கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக 10 கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக Prudent என்ற தேர்தல் அறக்கட்டளை பெற்ற 2668 கோடியில், 2180 கோடியை பாஜகவுக்கும், 21 கோடியை காங்கிரஸுக்கும் வழங்கியுள்ளது. இந்த Prudent அறக்கட்டளைக்கு பாரதி ஏர்டல், ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல, டாடா குழுமம் அதிகமாக நிதி வழங்கும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை பெற்ற 914 கோடியில், 757 கோடியை பாஜகவுக்கும், 77 கோடியை காங்கிரஸுக்கும் வழங்கியுள்ளது. மகிந்திரா குழுமத்தின் புதிய ஜனநாயக தேர்தல் அறக்கட்டளை பெற்ற 160 கோடியில் 150 கோடியை பாஜகவுக்கும், 5 கோடியை காங்கிரஸுக்கும் வழங்கியுள்ளது.
இது தவிர 5 அறக்கட்டளைகள் பெற்ற நிதி மொத்தத்தையும் பாஜகவுக்கே வழங்கியுள்ளன. தேர்தல் பத்திரங்கள் திட்டம் இருந்த போதும் நிதி பெறுவதில் உச்சத்தில் இருந்த பாஜக, அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய முறை அமலில் இருக்கும்போதும் மற்ற கட்சிகளைவிட பெருமளவு நிதியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


