Last Updated:
பாட்னாவில் லாலு பிரசாத் வீட்டின் முன் ஆர்ஜேடி நிர்வாகி மதன் ஷா தேர்தல் சீட் தரவில்லை என அழுது புரண்டது பீகார் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை வேட்பாளராக அறிவிக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பி பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் வீட்டின் முன்பு ஆர்ஜேடி கட்சியை சேர்ந்தவர் அழுது புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதில், முதல் கட்டமான வரும் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தற்போது பிகாரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தான், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்த நிர்வாகி அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் வீட்டின் முன் அழுது புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மதன் ஷா என்பவர் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ்வின் வீட்டின் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் வீட்டு கேட்டுக்குள் நுழைந்து லாலு பிரசாத்தின் காரை துரத்த முயன்ற போது போலீசார் அவரை தடுத்தனர்.
தொடர்ந்து தனது சட்டையை கிழித்துக்கொண்டு, அழுது கொண்டே பேட்டியளித்த மதன் ஷா, லாலு பிரசாத் யாதவ் தனக்கு சட்டப்பேரவை தேர்தலில் ஒரு சீட் தருவதாக கூறியதாகவும் தற்போது வேறு ஒருவருக்கு அந்த தொகுதியை ஒதுக்கிவிட்டதாகவும் கதறி அழுதார். லாலு பிரசாத் யாதவ் தான் தனது குரு என்ற மதன் ஷா, தேஜஸ்வி யாதவ் மக்களை சந்திப்பதே இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
October 19, 2025 8:58 PM IST
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை… ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் வீட்டின் முன் புரண்டு அழுத நிர்வாகி