தேசவிரோத செயல்கள் மற்றும் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் நுழைவதை அல்லது தங்குவதைத் தடுக்கும் வகையிலான புதிய விதிகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கூடுதலாக, மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற வெளிநாட்டினரை நாடு கடத்தும்வரை, அவர்களை தங்க வைக்க ஏதுவாக தடுப்பு முகாம்களை அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உள்துறை அமைச்சகம் (MHA) பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, தேச விரோத நடவடிக்கைகள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, பயங்கரவாதம், குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவராக இருந்தால் அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இத்தகைய வெளிநாட்டினர் இந்தியாவில் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதி மறுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025இன் (Immigration and Foreigners Act, 2025) கீழ் வருகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு வெளிநாட்டவரும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே அங்கு வசித்து வந்தால், அவர்கள் நாடு கடத்தப்படும்வரை தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட காக்க வைக்கப்படும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் தடுப்பு மையங்கள் அல்லது தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.
இதனிடையே உள்துறை அமைச்சகமும் கடுமையான பயோமெட்ரிக் சோதனைகளை அறிவித்துள்ளது. எந்தவொரு விசாவிற்கும் அல்லது இந்திய வெளிநாட்டு குடிமகனாக (OCI) பதிவு செய்வதற்கும் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டவரும், அவர்களின் விசா அல்லது ரெஜிஸ்ட்ரேஷன் வழங்கப்படுவதற்கு முன்பு பயோமெட்ரிக் தரவை வழங்க வேண்டும். இந்தியாவிற்குள் பிடிபடும் சட்டவிரோத வெளிநாட்டவர், அவர்கள் நாடு கடத்தப்படும்வரை, தடுப்பு மையங்கள் அல்லது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு அவர்களின் நடமாட்டத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய நபர்களை திருப்பி அனுப்புவதற்கு முன்பு எல்லைப் பாதுகாப்புப் படைகள் மற்றும் கடலோர காவல்படை, பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம் சட்டவிரோத நுழைவைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டவர் தொடர்பான அரசின் சமீபத்திய இந்த உத்தரவில், அவர்கள் இந்தியாவிற்குள் நுழைவது அல்லது தங்க மறுப்பு தெரிவிக்க வழிவகுக்கும் சில முக்கிய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் தீவிரவாத செயல்கள், இத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பண மோசடி, போதைப்பொருள் கடத்தல், சைபர் குற்றம், குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் போலி ஆவணங்கள் அல்லது நாணயத்தைப் பயன்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.
முக்கிய துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கும், மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைவாய்ப்பு விசாக்கள் (employment visas) உள்ளவர்கள் சிவில் அதிகாரிகளின் அனுமதியின்றி தனியார் மின்சாரம், நீர் அல்லது பெட்ரோலியத் துறைகளில் வேலை செய்ய முடியாது. தவிர, public exhibition-க்காக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது வெப் கன்டென்ட் தயாரிப்பதற்கு முன்பு வெளிநாட்டினர் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும். இந்தியாவில் மலையேறும் பயணங்களை மேற்கொள்ள ரூட் அப்ரூவல் மற்றும் liaison அதிகாரி உள்ளிட்ட சிறப்பு அனுமதி தேவை.
அதேபோல் பாதுகாக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய அல்லது தங்க வெளிநாட்டினரும் அனுமதி பெற வேண்டும். இருப்பினும், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளை உள்ளடக்கிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆப்கானிஸ்தான், சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வருபவர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் நுழைய தடைசெய்யப்பட்ட வெளிநாட்டினரின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை குடிவரவு பணியகம் பராமரிக்கும். நீதிமன்ற உத்தரவுகள், உடல்நல அபாயங்கள், ராஜதந்திர காரணங்கள் அல்லது பிற அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற முடியாத நபர்களின் பட்டியலையும் இது கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
September 03, 2025 2:29 PM IST
தேச விரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியாவில் என்ட்ரி பெர்மிட் இல்லை…! உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு…

