புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், “பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்தார். ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி அமலில் உள்ளது. அந்த 10% அடிப்படை வரியுடன் மொத்தம் 26% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரி ஏப்ரல் 9-ம் தேதி அன்று அமலுக்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால், 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.
இதன் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்தியாவின் நலனை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பலவீனமான பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து, 3-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் இந்திய, ரஷ்யப் பொருளாதாரங்களை ‘டெட் எக்கானமி’ ( Dead Economies), அதாவது மிக மோசமான நிலையில், மீட்க முடியாத சூழலில் இருக்கும் பொருளாதாரம் என்று குறிப்பிட்டிருந்தார். “இந்தியா, ரஷ்யாவுடன் என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறது என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால். இரண்டு நாடுகளும் தங்களின் மோசமான பொருளாதார நிலையை, இணைந்து இன்னும் மோசமாக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பியூஷ் கோயலின் கருத்து பார்க்கப்படுகிறது.