கொழும்பு (Colombo) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரபலமான தேசிய பாடசாலையின் 11ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில் உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”கடந்த 3ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
எனினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பாடசாலை நேரத்தில் மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டத்தின் மூலம் நீதி கோருதல்
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.
“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்?
அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
“இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |