கோலாலம்பூர்:
2026-ஆம் ஆண்டிற்கான முதல் கட்டத் தேசிய சேவைப் பயிற்சி (Series 1/2026) ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கியது. பெக்கான் முகாமில் ஏற்பட்ட இந்தச் சிக்கல் குறித்து பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய சேவைப் பயிற்சித் துறை (JLKN) விளக்கமளித்துள்ளன.
பெக்கான் முகாம் அதிகபட்சமாக 500 முதல் 550 பயிற்சியாளர்களை மட்டுமே ஏற்கும் திறன் கொண்டது. ஆனால், அன்று மொத்தம் 838 பேர் முகாமிற்கு வந்தனர்.
வழக்கமாகப் பயிற்சியில் சேர அழைக்கப்படுபவர்களில் பலர் கலந்துகொள்ள மாட்டார்கள் (No-show) என்பதால், இடங்களை நிரப்பக் கூடுதல் எண்ணிக்கையிலானோருக்கு (Overbooking) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை எதிர்பாராத விதமாக அனைவரும் வந்ததோடு, வருகையை உறுதிப்படுத்தாத தன்னார்வலர்களும் நேரடியாக (Walk-in) வந்ததால் இடநெருக்கடி ஏற்பட்டது.
எனவே பயிற்சியாளர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதியைக் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகப் பதிவு நிறுத்தப்பட்டது. சுமார் 254 பேர் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய சூழல் உருவானது என்று, பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
திருப்பி அனுப்பப்பட்டவர்களின் போக்குவரத்துச் செலவுகளை அரசாங்கமே ஏற்கும்; இதற்காக அவர்கள் பயணம் தொடர்பான ரசீதுகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் அடுத்த பயிற்சித் தொடரில் (Series 2) முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் மீண்டும் தேர்வுக் குழுவைச் சந்திக்கத் தேவையில்லை.
இந்தப் பதிவின் போது ஏற்பட்ட சிரமங்களுக்காகவும், குழப்பத்திற்காகவும் தேசிய சேவைப் பயிற்சித் துறை (JLKN) அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளது.
இந்த ஆண்டு (2026) மொத்தம் நான்கு கட்டங்களாகத் தேசிய சேவைப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. தற்போது கோலாலம்பூர் (Regiment 515) மற்றும் பெக்கான் (Regiment 505) ஆகிய இரண்டு முகாம்களில் மட்டுமே பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 13 முகாம்களை முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.




