இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (14ஆம் தேதி) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர்.
உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஐந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜித் தீப்கே, “தேசியக் கொடியை ஏந்திருப்பதையே சட்ட மீறல் என்றாகியிருக்கிறது. இது யாருக்காக? ஞானேஷ் குமாருக்காகவா?
ஞானேஷ் குமார், நரேந்திர மோடிக்கு என்ன கொடுக்கிறார்? ரயில், மெட்ரோ உள்ளிட்ட சேவைகளை நிறுத்தி டெல்லியை முடக்கிவிட்டீர்கள். அனைத்து பாதுகாப்புப் படையையும் டெல்லியில் குவித்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை போல் டெல்லியை மாற்றிவிட்டீர்கள்.
மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சியினர், முன்னாள் முதலமைச்சர்கள் என அனைவரையும் வீதிகளில் இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளீர்கள். இவையெல்லாம் ஒரே ஒரு ஞானேஷ் குமாருக்காகவா? நரேந்திர மோடிக்கு ஞானேஷ் குமார் ஏன் இவ்வளவு முக்கியமானவர்? நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற ஞானேஷ் குமார், உதவுகிறார் என்று நாங்கள் ஏன் நம்பக்கூடாது? அவர் தேர்தலில் வெற்றி பெற உதவவில்லை என்றால், நரேந்திர மோடி ஏன் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பை வழங்குகிறார்?” என அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
தொடர்ந்து 16ஆம் தேதி (இன்று) டெல்லியில் தேசியக் கொடி பேரணி ஏந்தி பேரணியாக சென்று, செண்ட்ரல் பார்க்கில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும், டெண்ட்ரல் பார்க் நிர்வாக காரணங்களுக்காக 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தேதிகளுக்கு மூடப்படுகிறது என டெல்லி நிர்வாகம் அறிவித்தது.
இருந்தாலும், தேசியக் கொடி பேரணிக்கு சிஜேபி மற்றும் மாணவர் அமைப்பினர் தயாராகி வந்தனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. மேலும், அபிஜித் தீப்கேவை நேரில் சந்தித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டெல்லி காவல்துறை எச்சரிக்கைவிடுத்தது.
இதனை மீறி சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் மாணவர் அமைப்பு தலைவர் நேஹா போரா ஆகியோர் தேசியக் கொடி பேரணி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அபிஜித் தீப்கே மற்றும் நேஹா போரா ஆகியோரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ள டெல்லி காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

