‘‘இந்த விஜயதசமித் திருநாளில், தேசியக் கட்டமைப்பை நோக்கிய தனது பயணத்தில் நூறாண்டுகளை நிறைவு செய்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம். தனி நபர்களின் ஒழுக்க மேம்பாட்டின் வழியான தேசியக் கட்டமைப்பு இது. தேசிய வாழ்வின் இருளடர்ந்த நாட்களை நம் நாடு கடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1925ஆம் ஆண்டு, இதே நாளில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தைத் தொலைநோக்குக் கொண்ட தீர்க்கதரிசி டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கினார். காலனித்துவ ஆட்சியாளர்களும் அவர்களின் இறையியல் கூட்டாளிகளுமான அயலகக் கிறித்துவ போதகர்களும் இணைந்து, தங்களுக்கு (அரசியல் ரீதியாக) அடிமைப்பட்டிருந்த நாட்டின் அடையாளத்தையும் வரலாற்றையும் பண்பாட்டையும் திட்டமிட்டு அழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்டின் கடந்தகாலத்தைப் பற்றி, விஷமத்தனமான கற்பனைகளைக் கட்டினார்கள்; நாட்டின் வரலாற்றை, மொழிகளை, நம்பிக்கைகளை, பண்பாட்டுப் பாரம்பரியத்தை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். சாமர்த்தியமாக இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் தகவல்களும் பள்ளிகளுக்குள்ளும் கல்லூரிகளுக்குள்ளும், ஏன், பொது மற்றும் தனி உரையாடல்களுக்குள்ளும் வலிந்து புகுத்தப்பட்டன. பிரிட்டிஷாரின் மொழியையும் நம்பிக்கையையும் நடை உடை பாவனைகளையும் ஏற்றுக்கொள்வதுதான், தங்களுடைய வருங்காலத்திற்கு ஒளிகொடுக்கும் என்றும், ஆன்மிக மேம்பாட்டைத் தரும் என்றும், மக்கள் தொடர்ந்து நம்பவைக்கப்பட்டனர். நாட்டின் தன்னிலை உணர்வு மழுங்கடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் கொடிய விளைவுகள் குறித்து, 1931 அக்டோபர் 20ஆம் நாள், தம்முடைய வட்ட மேஜை மாநாட்டு உரையில் மகாத்மா காந்தி தெளிவாக விவரித்தார்; பாரத தேசத்தைத் தக்கதொரு உவமையில் வர்ணித்தார் – பிரிட்டிஷார் வேர்களைத் தோண்டிச் சிதைத்துவிட்டபடியால் அழிந்துபட்ட அழகான மரம் இது!