கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் ஆனி ராஜா. எதிர்வரும் தேர்தல், கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு உள்ள வாய்ப்பு மற்றும் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார்.
“இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் போட்டியிடுகிறேன். 2019-ல் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக பார்க்கப்பட்டார். இப்போது அந்த சூழல் மாறியுள்ளது. இந்தியா கொடுங்கோன்மையை நோக்கி நகர்கிறது. இதனை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுக்கின்றனர். தேசத்தில் பாசிசம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிராக போராட வேண்டும். அதை வீழ்த்துவதற்கான கடைசி வாய்ப்பு எதிர்வரும் தேர்தல். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இடதுசாரிகள் சார்பில் வயநாட்டில் போட்டியிடுகிறோம் என அறிவித்தோம். வேட்பாளரும் அறிவிக்கப்பட்டார். ராகுல் காந்தி இங்கு போட்டியிட வேண்டாம் என்றும் தெரிவித்தோம். இது அனைத்தையும் மீறி இண்டியா கூட்டணியில் உள்ள எங்களுக்கு எதிராக அவர் போட்டியிடுகிறார்.
பாசிசத்தை அழிப்பது முக்கியமா அல்லது ஒற்றை தொகுதியில் வெற்றி பெறுவது முக்கியமா? இதில் யாரை அவர் வீழ்த்த உள்ளார். கேரளாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த நெருக்கடி ஏற்பட காரணம். அவர்களுக்கு அரசியலமைப்பை பாதுகாப்பதில் ஆர்வம் இல்லை. நான் தொகுதி மக்களுடன் பேசியதன் மூலம் எம்.பி-யாக ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்து தெரிந்து கொண்டேன். அவர் மீது வாக்காளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.