Last Updated:
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கியது. இந்தக் கொலை வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மிரியாலகுடாவைச் சேர்ந்த வியாபாரி மாருதி ராவ். இவரின் மகள் அம்ருதவர்தினி என்பவர், தனது இளம் வயது நண்பரான பிரணய் என்பவரைக் காதலித்து வந்தார். இதற்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்தனர்.
இதையடுத்து இளம் தம்பதி தனியாக வசித்து வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கர்ப்பமாக இருந்த அம்ருதவர்தினியை, அவரது காதல் கணவர் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், அரிவாளால் வெட்டி அவரைக் கொலை செய்தது.
தெலங்கானாவை உலுக்கிய இந்த வழக்கில், பெண்ணின் தந்தை கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்யத் தூண்டியது அம்பலமானது. இதையடுத்து, பெண்ணின் தந்தை மாருதி ராவ் உட்பட 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதையும் படியுங்கள் : “உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார் அமைச்சர்..” – நாகரிகமற்றவர்கள் கருத்துக்கு அண்ணாமலை பதில்
இந்த வழக்கு விசாரணை மிரியாலகுடாவில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜாமீனில் வெளிவந்த மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில், ஏ-1 குற்றவாளி மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஏ-2 குற்றவாளி சுபாஷ் குமார் என்பவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உட்பட எஞ்சிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாதி மறுப்பு செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில், நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கப்பட்டதற்கு உறவினர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பேசிய பிரணயின் தந்தை பாலசாமி, “நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை; மகனை இழந்து தொடர்ந்து துக்கத்தில் இருக்கிறோம்; இதுபோன்ற ஆணவக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்; இந்தத் தீர்ப்பு தெலங்கானா மாநிலத்தில், இந்த நாட்டில், இந்த சமூகத்தில் நீதி இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. சாதி ஆணவக் கொலையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும்” என்று தெரிவித்தார். இதையடுத்து, பிரணயின் குடும்பத்தினர் அவரது கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
March 10, 2025 7:51 PM IST


