Last Updated:
தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டத்தில், ருஷிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரர் ரோஹித், சார்ஜர் வயரால் ருஷிதாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அக்காவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் சார்ஜர் வயரால் அவரது கழுத்தை நெறித்து ஆணவக்கொலை செய்ததாக தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோத்தூரை சேர்ந்த ராகவேந்திராவின் மகளான ருஷிதாவும், அதே ஊரை சேர்ந்த தினேஷ் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரும் பார்த்துக்கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ கூடாது என கிராம பஞ்சாயத்து தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசியில் பேசக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மூன்று மாத காலம் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இல்லாதது போல் காட்டிக்கொண்டனர். இந்நிலையில் தான் ருஷிதா – தினேஷுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த தம்பி ரோஹித், அக்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ருஷிதாவின் செல்ஃபோனை பிடுங்கி பார்த்த ரோஹித், அவர் தினேஷுடன் பேசிக் கொண்டிருப்பதை அறிந்துகொண்டார். எனவே கடும் கோபமடைந்த ரோஹித் அக்கா கழுத்தில் செல்போன் சார்ஜ் வயரை சுற்றி இறுக்கி கொலை செய்துள்ளார். அக்கா இறந்தபின் தம்பிக்கு ஆவேசத்தில் தான் செய்த கொடும் செயல் பற்றி புரிந்தது. எனவே அவர் அங்கிருந்து வெளியில் சென்று விட்டார்.
வேலை விஷயமாக வெளியில் சென்று இருந்த பெற்றோர் வீடு திரும்பியபோது ருஷிதா தூங்கி கொண்டிருப்பதுபோல் படுத்த நிலையில் இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ருஷிதா கண் விழிக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரிடம் இருந்து எவ்வித அசைவும் இல்லை. எனவே அவர் இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பெற்றோர் மகளின் கழுத்தில் காயம் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அவர்களுக்கு மகன் ரோஹித் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடிய ரோஹித்தை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அக்காவை கொலை செய்ததை தம்பி ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ரோஹித் சிறையில் அடைக்கப்பட்டார்.
July 31, 2025 9:44 PM IST