சென்னை: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகமாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் முத்திரை பதித்து வருகிறது.
பன்னாட்டு கடல் மார்க்கத்தில் ஐரோப்பா, பாரசீக வளைகுடா, மற்றும் துபாய், சிங்கப்பூர் போன்ற மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் கடல்சார் மேலாண்மைக்கான இந்திய நுழைவுவாயிலாக உள்ள கேரளாவின் விழிஞ்ஞம் தானியங்கி துறைமுகம் கடந்த மே மாதம் பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உலக வர்த்தகத்தில் இந்திய கடல் பயணத்தில் மகத்தான அத்தியாயத்தை தொடங்கியுள்ள இந்த துறைமுகம் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் புவியியல் ரீதியாக இயற்கையாகவே 18 முதல் 20 மீட்டர் ஆழம் கொண்ட இந்தியாவின் ஆழமான துறைமுகமாக விழிஞ்ஞம் உருவெடுத்துள்ளது.
இதனால் சுமார் 24 ஆயிரத்து 500 கண்டெய்னர்களை சுலபமாக ஏற்றி, இறக்கிச்செல்லும் எம்எஸ்சி அரினா போன்ற சர்வதேச பிரமாண்ட சரக்கு கப்பல்கள் கூட இங்கு வந்து எளிதாக சரக்கு போக்குவரத்தை கையாளும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு, மத்திய அரசு மற்றும் அதானி குழுமத்தின் கூட்டு முயற்சியால் பொது – தனியார் கூட்டாண்மை பங்களிப்புடன் சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகத்தில் சோதனை முயற்சியாக கடந்த 2024 ஜூலை முதல் தற்போது வரை 415 சரக்கு கப்பல்கள் வந்து சென்றுள்ளன.
முதற்கட்ட பணியில் 10.50 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் வகையிலும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட விரிவாக்கப் பணிகள் மூலமாக சுமார் 45 லட்சம் கண்டெய்னர்களை கையாளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களில் இருந்து இந்த துறைமுகத்தை பாதுகாக்கவும், கப்பல்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல கடல் நீரோட்டம் ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் இருக்கவும் ரூ. ஆயிரத்து 500 கோடி செலவில் 3 கிமீ தூரத்துக்கு ஆழ்கடலின் நடுவே அக்ரோபாட்ஸ் கற்களுடன் கூடிய வாட்டர் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் பிரமாண்ட அலைதாங்கி தடுப்பணை பொறியியல் அற்புதமாக திகழ்கிறது.
சென்னை ஐஐடி-யுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன தானியங்கி கப்பல் கிரேன்கள், தானியங்கி யார்டு கிரேன்கள், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய விடிஎம்எஸ் (வெஸ்ஸல் டிராபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) தொழில்நுட்பத்தால் இந்த துறைமுகத்தின் ஒட்டுமொத்த மேலாண்மை மற்றும் இயக்கப்பணிகளும் மைய அலுவலகத்தின் கண்ணாடி கூண்டுகளுக்குள் இருக்கும் அதானி குழும ஊழியர்களால் கணினி வழியாக கண்காணிக்கப்பட்டு, லாவகமாக இயக்கப்படுகிறது. இதனால் ஒன்றரை நிமிடங்களுக்குள் ஒரு கண்டெய்னர் யார்டில் இறக்கவோ, ஏற்றவோ செய்யப்படுகிறது.
இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் இந்த சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அதானி குழும அதிகாரிகள் கூறுகையில், “கடல், ஆகாயம் மற்றும் சாலை மார்க்கத்தில் சரக்கு கண்டெய்னர் போக்குவரத்தை எளிமையாக தானியங்கி முறையில் கையாளும் வகையில் இந்த துறைமுகம் நாட்டுக்கே முன்னோடியாக தனது பணியை தொடங்கி செயலாற்றி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இந்த துறைமுகத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது.
ஒரு கிமீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இத்துறைமுகத்தில் இருந்து 10 கிமீ தூரத்துக்கு பலராமபுரம் வரை திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தை இணைக்கும் வகையில் சுரங்க ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஓராண்டுக்கு சராசரியாக சுமார் 50 முதல் 60 லட்சம் கண்டெய்னர்கள் கப்பல்களில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் சுமார் 75 சதவீத பரிமாற்றம் கொழும்பு, துபாய், சிங்கப்பூர் போன்ற பிராந்திய வெளிநாட்டு துறைமுகங்கள் மூலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் உள்நாட்டு சரக்கு பரிமாற்றத்துக்கு விழிஞ்ஞம் துறைமுகம் சிறந்த தீர்வு. கடல்சார் உள்நாட்டு வணிகம், வேலைவாய்ப்பு, சுற்றுலா போன்றவை பன்மடங்காக பெருகும்.
கண்டெய்னர் கையாளுதல் கட்டணமும் 200 முதல் 300 டாலர் வரை கணிசமாக குறையும். பன்னோக்கு திட, திரவ கப்பல் தளம், அதிநவீன தொழில்நுட்பம், பசுமை சூழல், ஆழ்கடல் கழிவு மேலாண்மை, குறைவான கார்பன் உமிழ்வு, பதுங்குகுழிகள், குடோன்கள் என நிலையான உள்கட்டமைப்பை இத்துறைமுகம் பெற்றுள்ளது.
வெளிநாட்டு துறைமுகங்கள் பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் ஜேட் மற்றும் டிராகன் சேவை வழித்தடத்தில் விழிஞ்ஞமும் இணைக்கப்பட்டு இருப்பது மற்றொரு சிறப்பு. இதன்மூலம் சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசிய நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவி்ன் முதல் தானியங்கி கிரேன் துறைமுகம் என்ற பெருமையை இத்துறைமுகம் பெற்றுள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா 10 லட்சம் கோடி டாலர் என்ற மிகப்பெரிய கடல்சார் பொருளாதார இலக்கை எட்ட விழிஞ்ஞமும் தனது பங்களிப்பை வழங்கும்’’ என்றனர்.