தெமெர்லோ, பிப்ரவரி 2:
ஜாலான் ஜெராண்டுட்-தெமெர்லோ சாலையில் நிகழ்ந்த நான்கு வாகன மோதலில், புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்ற சத்தியன் ராஜகோபால் (43) என்ற உதவி மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, சாலையில் சென்றுகொண்டிருந்த பெரோடுவா அல்சா (Perodua Alza) கார் ஒன்று, வலதுபுறமாகத் திரும்புவதற்காக நின்றது. அப்போது பின்னால் வந்த ஒரு டிரெய்லர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அல்சா காரின் பின்புறம் பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் அல்சா கார் எதிர்திசைச் சாலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது எதிரே வந்த சத்தியனின் புரோட்டான் சாகா கார் மீது அது பயங்கரமாக மோதியது. பின்னால் வந்த டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகனமும் இதில் சிக்கியது.
புரோட்டான் சாகா காரை ஓட்டிய சத்தியன் பலத்த காயமடைந்து அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அல்சா காரை ஓட்டிச் சென்ற 42 வயது நபர் பலத்த காயங்களுடன் தெமெர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மட் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நாசிம் பஹ்ரோன் கூறினார்.
டிரெய்லர் லோரி ஓட்டுநர் வாகனத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தவறியதே (கவனக்குறைவு) இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என நம்பப்படுகிறது.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




