சியோல், தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம்) சொத்துப்பங்கீடாக வழங்க வேண்டும் என்று சியோல் குடும்ப நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தென் கொரிய வரலாற்றிலேயே விவாகரத்து வழக்கொன்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை இதுவேயாகும்.
விவாகரத்தும் சொத்து வழக்கும்
தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் உரிமையாளர் குவான் ஹியுக்-பின். இந்த நிறுவனத்தில், பிளாக்பஸ்டர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டான ‘கிராஸ்பயர்’ மற்றும் ‘லாஸ்ட் ஆர்க்’ போன்ற உலகப் புகழ்பெற்ற கேம்கள் உருவாக்கப்பட்டன. ஸ்மைல்கேட் நிறுவனத்தின் முழு பங்குகளும் குவான் ஹியுக்-பின் வசம் மட்டுமே இருந்தன. கடந்த 2001-ம் ஆண்டு குவானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குவானின் மனைவி லீ ஹ்வா-ஜின், கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு விவாகரத்து மற்றும் சொத்து பிரிப்பு கோரி சியோர் குடும்பநல நீதிமன்றத்தை நாடினார்.



