Last Updated:
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இநதிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 74 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இநதிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை அபாரமாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா வென்று பதிலடி கொடுத்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் வெளியேறினர்.
திலக் வர்மா 26 ரன்கள் சேர்த்தார். அக்சர் படேல் 23 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 28 பந்துகளில் 59 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஷிவம் துபே 11 ரன்களும், ஜிதேஷ் சர்மா 10 ரன்களும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.
அதிரடியாக ரன்கள் சேர்க்கும் குவின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 14 ரன்கள் எடுத்து வெளியேறினர். ஓரளவு விளையாடிய டெவால்ட் ப்ரேவிஸ் 22 ரன்கள் எடுத்தார். மார்கோ யான்சென் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேற, தென்னாப்பிரிக்கா அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
December 09, 2025 10:20 PM IST


