கோலாலம்பூர் :
மலேசியாவில் செயல்படுவதாகக் கூறப்படும் தென்கொரிய மதக் குழுமம் (South Korean Cult Movement) குறித்துக் காவல்துறை கண்காணித்து வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த இயக்கம் தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை இன்னும் எட்டவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கூலிமில் நேற்று (சனிக்கிழமை) ‘மீண்டும் பள்ளிக்கு’ திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த அமைப்பு குறித்துத் தனக்குக் ‘சிறப்புக் கிளையால்’ (Special Branch) விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்.
“அந்த அமைப்பு, அதன் செயல்பாடுகள், உள்ளூர் பிரபலங்களின் ஈடுபாடு மற்றும் பல விஷயங்கள் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நமது பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் (Radar) உள்ளது,” என்று சைபுடின் கூறினார்.
இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பொதுவாக எந்தத் தீங்கும் இல்லாதவையாகத் தோன்றுவதாகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்,
இருப்பினும், தொடர்ச்சியான காவல்துறைக் கண்காணிப்பு நீடிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.




