தெங்கு மற்றும் உணவுப் பொருள்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 03 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருள்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல், நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்படி, தெங்கு சார்ந்த ஏற்றுமதித் துறையை 02 பில்லியன் டொலராகவும், உணவுப் பொருள்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை 01 பில்லியன் டொலராகவும் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்குரிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய எந்தவொரு ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இந்தத் தொழில்துறைகளைக் கட்டியெழுப்புவதற்கான பரிந்துரைகளும் கருத்துக்களும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த அனைத்து பரிந்துரைகளையும் கருத்துக்களையும் கருத்திற் கொண்டு எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கில் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கான ஊக்கவிப்புக்கள் வழங்கப்படும் என்றும் அங்கு தெங்கு சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான கைத்தொழில்களை நிறுவுவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியாளரைப் பாதுகாத்து, ஏற்றுமதி உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை இறக்குமதி செய்வதை முறைமைப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளைக் கட்டியெழுப்பி, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரமாக இந்நாட்டுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் குறிப்பிட்டார். (a)


