தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் டிஆர்பி.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த கார் தொழிற்சாலையை ஆகஸ்ட் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தவும் திட்டமுள்ளது. அதில் பல்வேறு புதிய தொழில்கள் வர உள்ளன.
பிரதமர் மோடியின் புதிய திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு பலன்கள் உள்ளன. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்துக்கான வெள்ள நிவாரணத் தொகையையும், கல்வித் தொகையையும் பிரதமர் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரந்து விரிந்த மனது. பிரதமர் மோடி அறிவித்ததைவிட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கின்றன. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.