Last Updated:
எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுவேலா மீது டிரம்ப் நிர்வாகம் நடத்திய முதல் நேரடித் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலாவில் உள்ள ஒரு முக்கிய துறைமுகப் பகுதியை அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி முழுமையாக அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கும் ‘டிரென் டே அராகுவா’ என்ற பயங்கரவாத மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல், இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி வந்ததே இந்த அதிரடித் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுக்கவும், குற்றச்செயல்களை ஒடுக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலா மீது டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நேரடித் தாக்குதல், உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெனிசுவேலா அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், தனது அரசைக் கவிழ்க்கவே அமெரிக்கா இத்தகைய முயற்சிகளைச் செய்வதாக அதிபர் நிகோலஸ் மதுரோ ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
துறைமுகத்தை உடைத்த அமெரிக்க ஏவுகணைகள்! வெனிசுலாவுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை


