Last Updated:
துர்காபூர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மம்தா பேனர்ஜி கருத்திற்கு, ஆர்.ஜி.கர் மருத்துவரின் தந்தை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம், துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்கார விவகாரத்தில் “ஒரு முதலமைச்சர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாவிட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும்” என பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் பெண் மருத்துவரின் தந்தை முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம், பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூர் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவி படித்துவருகிறார். அவர், கடந்த 10ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் உணவு அருந்த வெளியே சென்ற போது, மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12ஆம் தேதி) இந்தச் சம்பவம் குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, “இது தனியார் கல்லூரி. ஒடிசா கடற்கரையில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி அதிகாலை 12.30 மணிக்கு எப்படி வெளியே வந்தார்? இந்தச் சம்பவம் வனப்பகுதியில் நடந்திருப்பதாக தற்போதைக்கு தெரியவருகிறது.
பெண்கள் இரவில் வெளியே (கல்லூரிக்கு) செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வனப்பகுதி உள்ளது. போலீசார் அனைவரையும் சோதனை செய்கிறார்கள். யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மம்தா பேனர்ஜியின் இந்தக் கருத்து தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் தந்தை, முதல்வர் மம்தா பேனர்ஜியின் இந்தப் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.
#WATCH | North 24 Parganas, West Bengal | Father of the RG Kar Medical College rape and murder victim says, “… She has spoken very well. We’ll ask her to issue a fatwa tonight that no girl will be allowed to leave her home starting tomorrow morning. That would be good. No girl… https://t.co/6aGsFXr9Oa pic.twitter.com/FVZtCDKpz2
— ANI (@ANI) October 12, 2025
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் மிகவும் நன்றாக பேசியுள்ளார். நாளை காலை முதல் எந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என்று இன்றிரவு ஒரு ஃபத்வாவை (சட்டம்) வெளியிடச் சொல்வோம். பெண்கள் வெளியே செல்லாமல் இருந்துவிட்டால், எந்தச் சம்பவமும் நடக்காது இல்லையா? ஒரு முதலமைச்சர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாவிட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும்.
ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணுக்கு மேற்குவங்கத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இதன் மூலம், மாநிலத்திற்கு அவர் என்ன சொல்ல வருகிறார். சட்டம் ஒழுங்கை சரியாக கண்காணிக்காத முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர் மீதே பழி சொல்கிறார். இது எங்களை மிகவும் புண்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
October 12, 2025 10:09 PM IST
துர்காபூர் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம்; மம்தாவை கடுமையாக சாடிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை


