
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நள்ளிரவில் மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய மற்றும் விமானச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) பிரச்சினை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தை உடனடியாக திரும்பத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
விமானத்தின் எடையைக் குறைக்க வான்பரப்பில் சுற்றி எரிபொருளை வெளியேற்றும் நடவடிக்கை (fuel dumping or fuel burning) மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த விமானம் இன்று அதிகாலை 12:28 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னர், அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் விமான ஊழியர்களும் எந்தவித பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

