Last Updated:
ஹோலி பண்டிகையின்போது கொண்டாட்டம் என்ற பெயரில் ராஞ்சியில் பல்வேறு இடங்களில் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்டில் ஓசியில் மதுபானம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் தோட்டாக்களை தெறிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி முனையில் அடாவடி செய்தவர்களுக்கு சிறை விருந்து அளிக்கப்படுமா? ஹோலி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட திட்டமிட்ட இளைஞர்கள், பாக்கெட்டில் காசு இல்லாததால் கையில் துப்பாக்கியை எடுத்துள்ளனர். கடை ஊழியருக்கு உயிர் பயம் காட்டியவர்கள் சிசிடிவியில் சிக்கிய நிலையில், போலீஸ் வலையில் சிக்குவார்களா?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அங்காராவில் மதுபான கடை ஒன்று உள்ளது. ஹோலி பண்டிகையை ஒட்டி வியாபாரம் களைகட்டும் என்ற நினைப்பில், அந்த கடையை திறந்துவைத்து ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இடதுபுறம் உள்ள பார் ஊழியரும் சைடிஷ் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது, இரு இளைஞர்கள் தோள் பேக் அணிந்தபடி வந்தனர். அவர்கள் கொண்டுவந்த பையில் மதுபானத்தை வாங்கி குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் என்ன வேண்டும் என்று கடை ஊழியர் ஆர்வமாக கேட்டுள்ளார். அவர்களோ, பைக்குள் கையை விட்டு பணத்தை எடுப்பதற்குப் பதிலாக துப்பாக்கியை எடுத்துள்ளனர்.
உடனே, துப்பாக்கியை காட்டி மதுபான பாட்டில்களை எடுத்து வெளியே வை என்று மிரட்டியுள்ளனர். அதைப் பார்த்து கடை ஊழியர் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதனால், அடாவடி இளைஞர்கள் இருவரும் மதுபாட்டில்களை குறிவைத்து தோட்டாக்களை தெறிக்கவிட்டனர். அதற்கும் ஊழியர் அசராததால், இவன் வேலைக்கு ஆக மாட்டான் எனக் கூறியபடி இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்து நடையைக் கட்டினார்.
போதை வெறியில் இருந்த மற்றொரு இளைஞர், ஓசியில் சரக்கு கொடுத்தால்தான் இடத்தை காலி செய்வேன் எனக்கூறி, துப்பாக்கியால் ஒவ்வொரு பாட்டிலையும் காலி செய்தார். போனால் போகட்டும் என்ற முடிவுக்கு வந்த கடை ஊழியர், உயர்ரக சரக்கு ஒன்றை கையில் எடுத்துக் கொடுத்துள்ளார். அதை வாங்கி பையில் போட்டுக் கொண்ட போதை இளைஞர்கள் அங்கிருந்து நடையை கட்டினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
துப்பாக்கி முனையில் மிரட்டல்… ஓசியில் சரக்கு கேட்டு அடாவடி… ஹோலி கொண்டாட்டத்தில் அட்டூழியம்…


