கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் என்பவர் 14 கிலோ தங்கத்துடன் துபாயில் இருந்து வந்த போது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த மூன்றாம் தேதி நடந்தது. அவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 12 போட்டி வரை கோடி ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மகளூரை சேர்ந்த 32 வயதாகும் ரன்யா ராவ் கன்னடத்தில் ‘மாணிக்யா‘, ‘பட்டாக்கி‘ என 2 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வெளியான விக்ரம் பிரபு நடித்த ‘வாகா‘ என்ற படத்தில் இவர் இடம் பெற்றிருந்தார். தங்க கடத்தல் புகாரில் கைதான ரன்யா விசாரணைக்கு பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் துபாயில் இருந்து தங்கத்தை எப்படி கடத்தி வந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் விபரம் பின்வருமாறு–
விசாரணையின் போது தனக்கு ஒரு இன்டர்நெட் அழைப்பு வந்ததாகவும் அதில் பேசியவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 3 ஏ வாசலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொள்ள சொன்னதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் துபாய் விமான நிலையத்தின் சாப்பிடும் அறையில் இருந்த வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவரிடமிருந்து 2 பொட்டலங்களை ரன்யா ராவ் வாங்கியுள்ளார். அவர் அறிமுகம் இல்லாத நபர். சுமார் 6 அடி உயரம் இருந்துள்ளார். அவர் பேசியது அமெரிக்கன் இங்கிலீஷை போல் இருந்துள்ளது.
அதற்கு முன்னரே ரன்யா ராவ் சரியான முறையில் திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடையில் இருந்து ஒட்டக் கூடிய டேப்பை வாங்கியுள்ளார். விமான நிலையத்திற்குள் கத்தரிக்கோலை பயன்படுத்த முடியாது என்பதால் தான் வாங்கிய டேப்பை ஏற்கனவே வெட்டி எடுத்து தனது பேக்கில் வைத்துள்ளார் ரன்யா ராவ்.
சாப்பிடும் அறையில் தங்கத்தை வாங்கிய பின்னர் அருகில் இருந்த வாஷ் ரூமுக்கு சென்று, அடுத்த திட்டத்தை ஆரம்பித்தார். பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் 12 தங்க கட்டிகள் இருந்துள்ளன. அதனை எப்படி மறைத்து கொண்டு செல்லலாம் என்பது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளார்.
அதன்பின்னர் குதிங்கால் முதல் இடுப்பு வரையில் தங்க கட்டிகளை டேப்பால் நன்றாக சுற்றி கட்டியுள்ளார். சிறிய தங்க துண்டுகளை ஷூ மற்றும் பாக்கெட்டுகளுக்குள் வைத்துள்ளார் ரன்யா ராவ்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக பெங்களூருவுக்கு மார்ச் 3 ஆம் தேதி வந்த பின்னர் அவருக்கு உதவி செய்வதற்காக ஏற்கனவே ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐபிஎஸ் அதிகாரியும் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையுமான ராமச்சந்திர ராவ் போனின் மூலம் தேவையான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதன்படி சோதனை மையங்களை கடநது வந்துள்ளார் ரன்யா.
இருப்பினும், ரன்யா ராவ் அடிக்கடி துபாய் சென்று வருவது வருமான புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரன்யா ராவ் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு சில அடிகளுக்கு முன்பாக அவரை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்க கட்டிகளை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரன்யா ராவ் 27 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் 4 முறை துபாய்க்கு சென்று திரும்பியுள்ளார் ரன்யா ராவ். தற்போது அவர் அளித்துள்ள வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
March 13, 2025 6:01 PM IST
துபாயிலிருந்து 14 கிலோ தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்