Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் திகார் சிறையில் உபா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள எம்.பி. வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதேபோல், இந்தியா கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இரண்டு தரப்பில் இருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வரும் 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த வாக்குப் பதிவில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் ஜம்மு & காஷ்மீர் பாரமுல்லா நாடாளுமன்ற உறுப்பினர் இன்ஜினியர் ரஷித் வாக்களிப்பதற்காக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாத குழுக்களுக்கு நிதி திரட்டிக் கொடுத்த வழக்கில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட இன்ஜினியர் ரஷித், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திஹார் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் இருந்தபடியே அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு & காஷ்மீர் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இன்ஜினியர் ரஷித்
இன்ஜினியர் ரஷித் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் அவருக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை பரோல் வழங்கியிருந்தது. பின்னர் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் அவர் தனது வாக்கை செலுத்துவதற்கு டெல்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு அனுமதி அளித்துள்ளது.
September 06, 2025 7:44 PM IST
துணை ஜனாதிபதி தேர்தலில் இருக்கும் சுவாரஸ்யம்! வாக்களிக்கப் போகும் உபா சட்டத்தின் கீழ் சிறையிலிருக்கும் எம்.பி.

