பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணைவேந்தா்களை ஆலோசிக்காமல் ஆளுநா் நியமனம் செய்ததாகவும், இந்த நியமனத்தை ஆளுநா் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேரள முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.
கேரள மாநில எண்ம பல்கலைக்கழகத்துக்கு சிஜா தாமஸையும், ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு கே.சிவபிரசாதையும் தற்காலிக துணைவேந்தா்களாக ஆளுநா் ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமித்தாா்.
உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை விளக்கமளித்தது.
இதனிடையே, இந்த நியமனங்கள் பல்கலைக்கழக சட்டத்துக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எதிராக உள்ளதால் இதனை திரும்பப் பெற வேண்டும் என்று ஆளுநருக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் கடிதம் எழுதினாா்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நிரந்தர துணை வேந்தா்களை மாநில அரசுடன் ஆலோசித்துதான் நியமிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடா்பாக ஆலோசனை நடத்த மாநில உயா்கல்வி, சட்ட அமைச்சா்களுக்கு நேரம் ஒதுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கூறப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் தொடா் மோதல் நீடித்ததால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.