
Last Updated:
பீகாரில் பார்வையற்ற நீச்சல் வீரர் ஒருவர் 13 உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்பார்வை குறைபாடு இருந்தாலும், தனது உயிரை பணயம் வைத்து 13 உயிர்களைக் காப்பாற்றிய பீகாரைச் சேர்ந்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புல்லு சாஹ்னி, தனது துணிச்சல் காரணமாக இவர் பலருக்கும் உத்வேகமாக மாறியுள்ளார். சிறுவயதிலிருந்தே பார்வையற்றவராக இருந்தாலும், ஒருவரின் திறமைக்கும், தைரியத்துக்கும் முன்பு உடல் ஊனம் ஒரு பொருட்டே இல்லை என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்துள்ளார். இவரின் வியக்கத்தக்க திறமை, 13 பேரின் உயிரைக் காப்பாற்ற காரணமாகியுள்ளது மற்றும் 14-க்கும் மேற்பட்ட உடல்களை நீர்நிலைகளில் இருந்து மீட்டுள்ளார்.
புல்லு சாஹ்னியின் நீச்சல் திறமை அவரது மாவட்டத்தில் பிரபலமான ஒன்று, தற்போது அதை நாடு முழுக்க அறியச் செய்திருக்கிறார். பார்வைக் குறைபாடுள்ளவராக இருந்தாலும், புல்லு தனித்துவமான நீச்சல் பாணியை கொண்டுள்ளார். அந்த பகுதியில் தண்ணீரில் ஏற்படும் விபத்துகளுக்கு மக்கள் அவரது உதவியையே நாடுகிறார்கள். இத்தகைய துணிச்சல் கொண்ட புல்லுவை லோக்கல் 18 சமீபத்தில் பேட்டி கண்டது, அதில் அவர் கூறியதாவது, “என்னால் பார்க்க தான் முடியவில்லை, அதில் என்ன பிரச்சனை இருக்கிறது, என் திறமை ஒரு போர்வீரனுக்கு குறையாமல் இருக்கும்.” என்று அவர் கூறினார்.
அவரது இந்த தன்னம்பிக்கை மற்றும் திறமை, உடல் குறைபாடுகள் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதை காட்டுகிறது. அவரது வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் தருகிறது, அவரது இந்த தைரியம் மற்றும் கடின உழைப்பின் மூலம் எந்த சிரமத்தையும் அவரால் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாக பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தும்டுமா கிராமத்தில் வசிக்கும் புல்லு சாஹ்னியை ‘வாட்டர் வாரியர்’ என்று ஊர்மக்கள் அழைக்கிறார்கள். அவரது தைரியமும், அர்ப்பணிப்பும் அவரது கிராமத்தில் மட்டுமல்ல, முழு சமஸ்திபூர் மாவட்டம் முழுவதும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. அங்கு அவர் ஒரு உண்மையான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். உடல் வலிமையை மட்டுமே நம்பி விடாமல், மன உறுதியுடன் எந்த தடையையும் சமாளிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அவரது கதை மன வலிமையின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் அவர், தனது வீடு ஆறு மற்றும் குளத்திற்கு அருகில் இருப்பதாகவும், அவர் மல்லா சாதியைச் சேர்ந்தவர் என்றும் பகிர்ந்து கொண்டார். சிறுவயதிலிருந்தே நீச்சல் கலைஞரான இவர், தனது தந்தையுடன் மீன்பிடிக்கும் போது தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறார். “என்னால் பார்க்க முடியாது, ஆனால் தண்ணீருக்குள் சிறப்பாக செயல்படும் வகையில் எனக்கு திறமை உள்ளது. நான் தண்ணீரில் இருக்கும் போது, ஒரு இறந்த உடலையோ அல்லது உயிருடன் இருக்கும் நபரையோ என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது, நான் அவர்களை பாதுகாப்பாக வெளியே எடுத்து வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
புல்லு சாஹ்னி லோக்கல் 18 க்கு மேலும் கூறுகையில், அவர் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும், பல உடல்களை தண்ணீரில் இருந்து மீட்டுள்ளதாகவும் கூறினார். அவர் உடலை மீட்டெடுக்கும் போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது பஞ்சாயத்து தலைவர் அவருக்கு நிதியுதவி அளிக்கின்றனர். இந்த தனித்துவமான திறமையும், அவரது ஈடு இணையில்லாத தைரியமும் அவருக்கு அப்பகுதியில் ஒரு தனி அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது.
January 01, 2025 4:40 PM IST
துணிச்சலின் மறுபெயர் இவர் தான்.. 13 உயிர்களை காப்பாற்றிய பார்வையற்ற நீச்சல் வீரர்… பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்!

