Last Updated:
மலேசியாவில் பிரதமர் மோடி, அன்வர் இப்ராஹிம் வழங்கிய விருந்தில் எம்ஜிஆர் பாடல் ஒலித்தது. மோடி, ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவை சந்தித்து உரையாடினார். 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த வீரரையும் பிரதமர் சந்தித்து உரையாடினார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் மோடிக்கு அளித்த விருந்தில் எம்ஜிஆரின் பாடல் ஒலித்தன. எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ பாடலுடன் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு பிரதமர்களும் உற்சாகமாக கண்டுகளித்தனர். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த ஜெயராஜ் ராஜா ராவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவ்-ஐ சந்தித்தது மிகவும் சிறப்பான அனுபவம் எனவும், தைரியமும், தியாகமும் நிறைந்த அவரது வாழ்க்கை அனுபவங்களை கேட்டது உத்வேகம் அளித்ததாகவும் பிரதமர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமருடனான இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக ஐஎன்ஏ வீரர் ஜெயராஜ் ராஜா ராவ் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய பிரதமர் அலுவலகம் சென்ற பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது, வர்த்தகம், செமிகண்டக்டர், மலேசியாவில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாளை நமதே’ என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்… pic.twitter.com/SEjT7Zaalw— Narendra Modi (@narendramodi) February 8, 2026
இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தொன்மை வாய்ந்த தமிழ் மொழியும், தமிழ்ப் பண்பாடும்தான் இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார். திரைப்பட துறை ஒப்பந்தம் இந்திய – மலேசிய கலாசாரப் பிணைப்பை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து, 2 நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
தீவிர ரசிகர்… மலேசியாவில் பிரதமர் மோடியின் மதிய விருந்தில் எம்ஜிஆர் பாடல் ஏன் ஒலித்தது?


