Last Updated:
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, டெல்லியில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்.பி. திருச்சி சிவா, தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் அரசு உடனான உறவை இந்தியா முறித்துக் கொண்ட நிலையில் டெல்லியில் அனைத்துக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாக எல்லை மூடல் என மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தானும் இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க தடை, சிம்லா ஒப்பந்தம் ரத்து என அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதான கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் வெளியேவந்த திமுகவின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா, “பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமுற்றுள்ளனர். இது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சூழலில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம், அப்பாவி மக்கள் கொல்லுகின்ற நிலைமை தொடரக்கூடாது. ஏற்கனவே 2017ல் அமர்நாத சென்ற 8 யாத்ரீகள் கொல்லப்பட்டார்கள். 2019ல் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நினைவுகூர்ந்து தலைவர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார். இது தொடர்ந்து மூன்றாவது நிகழ்ச்சி எனவே அப்பாவி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது நமது கடமை.
எனவே இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளை வெறும் வார்த்தைகளாக கண்டிப்பதோடு நிறுத்திவிடாமல், இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் நடக்கக்கூடாது. எனவே நாம் வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதோடும், அவற்றைக் கண்டிப்பதோடும் நின்றுவிடக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும் உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக ஆதரிக்கும்” எனத் தெரிவித்தார்.
April 24, 2025 10:21 PM IST


