புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது:
பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் கிடைக்கும்போது அவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு நாடு முழுவதிலும் பொது மக்களிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தன. தீவிரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தற்செயலாக அந்த மூவரும் தலையில் சுடப்பட்டே இறந்தனர்.
பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையிடமிருந்தும், ராணுவ உளவுப் பிரிவிடமிருந்தும் உறுதியான தகவல்கள் வந்தன. கடந்த 22-ம் தேதி அவர்களது வயர்லெஸ் கருவிகளின் இருப்பிடம் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மிகச் சரியாக எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பதை உளவுப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டறிந்தோம். அதன் பின்னர் என்கவுன்ட்டிரில் தீவிரவாதிகள் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.