Last Updated:
தீபாவளி பண்டிகையை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
தென் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலர் சந்தைகளில், மலர்கள் விற்பனைக்கு மிக முக்கியமான சந்தையாகத் திகழ்ந்து வருவது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தையாகும்.
இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் இருந்தும் பூ வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அதேபோன்று திண்டுக்கல், ராயக்கோட்டை, மங்களூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உள்ளூர்களான ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், குமாரபுரம், தோவாளை போன்ற பகுதிகளில் இருந்தும் பூக்கள் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விசேஷ நாட்களிலும் முகூர்த்த நாட்களிலும் பூக்களின் விலை அதிகரிக்கும். வியாபாரமும் சூடு பிடிக்கும். இன்று ஐப்பசி முதல் சுபமுகூர்த்த தினம் மற்றும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை களைகட்டி உள்ளது.
கடந்த வாரம் மல்லி பூ கிலோ ரூ.500, 600 என விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 2500க்கும், பிச்சிப்பூ ரூபாய் 1250க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து வருவதால் பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனாலும் விலை ஏறியுள்ளது என பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று அரளிப்பூ ரூபாய் 250, வாடாமல்லி ரூபாய் 250, கேந்தி ரூபாய் 50, சம்பங்கி ரூபாய் 100, முல்லை ரூபாய் 1500, ரோஸ் 150, மரிக்கொழுந்து 100, செவ்வந்தி 100, துளசி 50 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் மலர் சந்தையில் கூடியுள்ளதால் வியாபாரம் களைகட்டியுள்ளது.
Kanniyakumari,Tamil Nadu
October 19, 2025 2:02 PM IST