சென்னை: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் வரும் அக்.18-ம் தேதி முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட தீ விபத்தின் புள்ளி விபரத்தின் அடிப்படையில் சென்னையில் மட்டும் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தீயணைப்பு குழுவினரும் வந்துள்ளனர்.
இவர்கள் வரும் அக்.18 முதல் அக்.22-ம் தேதி வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி அன்று சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நிலை நிறுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு ஊர்திகளுக்கு நீர் வழங்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடம் இருந்து 50 தண்ணீர் லாரிகளில் பெறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனை செய்வதற்கு தமிழகம் முழுவதும் 9,207 கடைகளுக்கு தடையில்லா சான்றுகள் வழங்கப் பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் 1,088 கடைகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் 89 கடைகளுக்கும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.