Last Updated:
79 ஆவது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி, தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது, ஜிஎஸ்டி-யில் சீர்த்திருத்தம் செய்யப்படும் என்றார்.
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி இந்த தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில், பிரதமர் மோடிக்கு 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, 22 குண்டுகள் முழங்க, விமானப்படையின் எம்.ஐ.17 ரக விமானம் மூலம் மலர் தூவ, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியதும், தேசியக் கொடியுடன், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை குறிப்பிடும் வகையிலான கொடியையும் ஏந்தியவாறு போர் விமானங்கள் வானில் பறந்தன.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 12 ஆவது முறையாக உரையாற்றினார். அதில், சுதந்திர தின விழா, 140 கோடி மக்களின் கொண்டாட்டம் என்று கூறினார். கடந்த 75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம், கலங்கரை விளக்கம் போல தமக்கு வழிகாட்டுவதாக குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் மூலம், பயங்கரவாதிகளின் கற்பனைகளுக்கு எட்டாத பதிலடியை கொடுத்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரித்த செமிகண்டக்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். போர் விமானங்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட என்ஜின்களை இளம் விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தீபாவளி அன்று ஜிஎஸ்டி-யில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
August 15, 2025 9:54 AM IST


