தில்லியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சல்மான் கானைக் காண்பதற்காக யாருக்கும் தெரியாமல் மும்பைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் மூவரையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தில்லி சதார் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது, 11 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் மூவர் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். ஆன்லைன் கேமில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வாஹித் என்பவருடன் நண்பர்களாகி உள்ளனர்.
இந்த நிலையில், மும்பையில் நட்சத்திரங்களைச் சந்தித்ததாகவும் உங்களையும் சந்திக்க வைக்க முடியும் என வாஹித் கூறியதை அடுத்து, வீட்டில் யாருக்கும் தெரியாமல் மூன்று சிறுவர்களும் ஜூலை 25 ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தேடுதல் பணியைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் சிறுவர்களை தேடுவதை அறிந்த வாஹித், சிறுவர்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். இதையடுத்து, சிறுவர்கள் தங்களின் திட்டத்தை மாற்றிக் கொண்டு நாசிக் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
கண்டுபிடித்தது எப்படி?
முதல்கட்ட விசாரணையில், சிறுவர்கள் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஜல்னாவைச் சேர்ந்த வாஹித் என்பரைக் காணச் செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஜ்மேரி கேட் நோக்கி செல்வதை கண்டுபிடித்தனர். பின்னர், புதுதில்லி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.
சிறுவர்கள் சென்ற நேரத்தைக் கணக்கிட்டு, சச்கண்ட் விரைவு ரயில் மூலம் மும்பை சென்றிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், ரயில்வே காவல்துறையுடன் இணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.
ஜல்னாவில் உள்ள வாஹித் வீட்டிலும் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதனிடையே, சிறுவன் ஒருவன் உபயோகித்த செல்போன் எண்ணைக் கண்டறிந்த காவலர்கள், அதனை வைத்து நாசிக் ரயில் நிலையத்தில் இருப்பதை உறுதி செய்து பிடித்துள்ளனர்.