தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டும் வகையில் அந்த அமைப்பின் நிறுவனர் – தலைவர் கே.வி.கே.பெருமாளுக்கு அகில இலங்கை கம்பன் கழகம் “கம்பப் பணி வள்ளல்’ விருது வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தில்லிக் கம்பன் கழகத்தின் செயலர் எஸ்.பி.முத்துவேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லிக் கம்பன் கழகம் பல்வேறு தமிழ் அறிஞர்களை தில்லிக்கு வரவழைத்து சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு இலக்கியத் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
மேலும், தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி, அடுத்த தலைமுறைக்குக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.
இந்நிலையில், தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டி, அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் – தலைவர் கே.வி.கே. பெருமாளுக்கு “கம்பப் பணி வள்ளல்’ என்ற விருதை அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் நிறுவனரும், பிரபல ஆன்மிகப் பேச்சாளருமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் வழங்கியிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

