பாபநாசம் திரைப்படத்தில் இளைஞர் ஒருவரை கொன்று உடலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே புதைப்பது போன்று, நிஜத்திலும் குலைநடுங்க வைத்த சம்பவம் ஒன்று மும்பையில் நிகழ்ந்துள்ளது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த த்ருஷ்யம், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. இந்தப் படம் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பிலும் வெளியானது. தனது மகளிடம் அத்துமீறிய இளைஞரை, இளம்பெண்ணின் தந்தை கொலை செய்து அதை மறைக்கும் திரில்லர் படமான திருஷ்யம் போன்று, திகிலூட்டும் மும்பை சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்கபடா பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சவான். 35 வயதான இவர், மனைவி கோமல் மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார். கணவன் – மனைவி இருவரும் தங்களது குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விஜய் சவான் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது சகோதர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் திங்கட்கிழமை அன்று, விஜய் சவானின் சகோதரர்கள் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, அவரின் மனைவி கோமல் இல்லாத நிலையில், வீட்டில் தேவையின்றி சில இடங்களில் புதிதாக டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த டைல்ஸ் வேறு மாடலில் இருந்ததையும் கண்டு சகோதரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
உடனே, புதிதாக போடப்பட்ட டைல்ஸ் கற்களை உடைத்துப் பார்த்தபோது உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் முன்னிலையில் தோண்டிப் பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் விஜய் சவானில் உடல் இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் 28 வயதான கோமல், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 20 வயதான மோனு சர்மா என்பவருடன் திருமண பந்தத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்தது. மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டில் குளியல் அறையில் உள்ள வடிகால் பகுதி அடைபட்டுள்ளதாக கோமல், பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
அதனால், தொழிலாளர்கள் மூலம் அடைப்பை சரி செய்த பின்னர், அந்த பகுதியில் புதிதாக டைல்ஸ் கற்கள் பதித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் கூறியபோதும், கடந்த இரண்டு நாட்களாக கோமல் மற்றும் அவரின் ரகசிய காதலன் மோனு சர்மா தலைமறைவாகியுள்ளனர். எனவே, தங்களது திருமண பந்தத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை, கோமலே, ரகசிய காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர், உடலை மறைப்பதற்காக வீட்டிற்குள்ளேயே குளிதோண்டி புதைத்திருக்கலாம் என கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இருந்தபோதும், தலைமறைவாக உள்ள கோமலையும், அவரின் ரகசிய காதலனும் பிடிப்பட்டதால் தான் முழு உண்மையும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளார். இதனால், இருவரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அண்மையில் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் கணவனை, அவரின் மனைவியே ரகசிய காதலனுடன் சேர்ந்த ஆள்வைத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதேபோல், மீரட்டில் கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத்தை, அவரின் மனைவி தனது ரகசிய காதலனுடன் சதித் திட்டம் தீட்டி தீர்த்துக்கட்டியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் திருஷ்யம் படத்தை மிஞ்சும் அளவிற்கு, கணவரை கொலை செய்து, அவரின் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டு புதைத்து, டைல்ஸ் போட்டு மூடிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
Mumbai,Maharashtra
July 22, 2025 6:48 PM IST
திருஷ்யம் படத்தை மிஞ்சும் சம்பவம்.. காட்டிக்கொடுத்த டைல்ஸ் டிசைன்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!