Last Updated:
மத்திய அரசு புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில், பிப்ரவரி 13ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு, 60 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அதிக திருத்தங்கள் மேற்கொண்டதால், சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு சிரமமாக இருப்பதாகவும், எனவே எளிதில் புரிந்துகொள்வதற்காக புதிய வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பின்னர் பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு இந்தப் புதிய வருமான வரிச் சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வுக் குழு அதனை ஆராய்ந்து, கடந்த ஜூலை 21ஆம் தேதி விரிவான அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
இதனையடுத்து புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், பைஜயந்த் பாண்டா தேர்வுக் குழு பரிந்துரைகளை உள்ளடக்கிய வருமான வரிச் சட்ட மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி பரிசீலனைக்காக அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
August 08, 2025 9:02 PM IST


