Last Updated:
புதுச்சேரியில் திருமண மொய்ப் பணத்தில் கை வைத்தவருக்கு கைக்காப்பு போடப்பட்டதன் பின்னணி என்ன…?
புதுச்சேரியில் காரில் பூட்டி வைத்த மொய் பணம் ரூபாய் ஐந்தரை லட்சத்தை திருடிச் சென்ற நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். மொய் பணத்தை மட்டும் குறிவைத்து திருடும் கொள்கைத் திருடர் வசமாக சிக்கியது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு செய்து கல்யாண மண்டபம் புக் செய்து, விருந்து, வீடியோ பதிவு, அலங்காரம், ஜவுளி, நகை, பண்டம், பாத்திரம் என தனது வாழ்நாள் சேமிப்பை போட்டு திருமண ஏற்பாடுகளை செய்து, சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி திருமணம் செய்துவைத்தால், ஒருவர் நோகாமல் வந்து மொய்ப் பணத்தை மொத்தமாக வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று விடுவார். இந்த டீலிங் நன்றாக இருக்கிறதே என இதையே தனது வாழ்நாள் தொழிலாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார் இந்தத் திருடர். மொய்ப் பணத்தில் கை வைத்தவருக்கு கைக்காப்பு போடப்பட்டதன் பின்னணி என்ன…?
லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான மோகன மகேந்திரா. இவரது தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் மொய் பணம் மற்றும் நகைகளை எடுத்து மோகன் மகேந்திரா தனது காரின் டிக்கியில் வைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க மண்டபத்தின் உள்ளே சென்றிருக்கிறார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது காரின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ந்து போனார். காரின் டிக்கியும் திறந்து கிடந்துள்ளது. உள்ளே சோதித்துப் பார்த்தபோது காரில் மொய் பணம் வைத்திருந்த பை மட்டும் திருடுபோய் இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் மட்டும் வெகுநேரமாக மொய் பணத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. திருமண மண்டபத்திற்குள் சுமார் 4 மணி நேரமாக அங்குமிங்கும் சந்தேகப்படும் படியாக சுற்றி வந்துள்ளார். அவர் யார் என இரு வீட்டாரிடமும் கேட்டபோது தெரியவில்லை எனக் கூறியிருக்கின்றனர்.
திண்டிவனத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் டெல்லி கணேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்திருந்த 99 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீசாரை காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி வெகுவாகப் பாராட்டினார்.
இந்த முறை தமிழ்நாட்டில் திருடினால் மாட்டிக் கொள்வோம் என்பதால், புதுச்சேரிக்கு வந்து திருடலாம் என திட்டமிட்டு முதல் முறையாக புதுச்சேரியில் கைவரிசைக் காட்டியுள்ளார். ஆனால், அவரது புகைப்படம் அவரை வசமாக சிக்க வைத்துவிட்டது.
Puducherry (Pondicherry)
திருமண மொய் பணத்தை மட்டும் குறிவைத்து திருடும் நபர்… ரூ.5.5 லட்சம் மொய்ப் பணத்தை திருடும்போது சிக்கியது எப்படி…?


