Last Updated:
ரூ.49,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை தனது மனைவிக்கு பரிசாக கொடுத்த வழக்கறிஞரின் வீட்டிற்கு போலீசார் விரைந்த நிலையில், அவர் தற்போது எதிர்பாரத நிலையில், சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசாக வழங்கிய வழக்கறிஞர் ஒருவர் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறார். ரூ.49,000 மதிப்புள்ள அந்த ஸ்மார்ட்போன், குஜராத்தில் நிகழ்ந்த சைபர் மோசடியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறாக, மாநில எல்லைகளை கடந்து சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் ஒரு பெரிய மோசடியின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது.
கொல்கத்தாவின் மிஷன் ரோ எக்ஸ்டென்ஷனில் உள்ள கடையொன்றில் இருந்து வழக்கறிஞர் ஜிஎஸ்டி பில்லுடன் கூடிய, சீல் வைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் வாங்கியிருக்கிறார். பின்னர், அதை தனது மனைவிக்கு திருமண நாளன்று பரிசளித்தார். ஸ்மார்ட்போன் புதியது போலவே இருந்ததால், எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் அதை வாங்கியிருக்கிறார்.
ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு, குஜராத்தின் ராஜ்கோட் போலீசார் இந்த தம்பதியின் வீட்டிற்கு வந்து, அவர் மனைவி பயன்படுத்திவந்த போன், சைபர் கிரைம் வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்று பகீர் கிளப்பியுள்ளனர். ஐஎம்இஐ (IMEI) எண் அடிப்படையில் போலீசார் அந்த போனின் அடையாளத்தையும் உறுதி செய்தனர்.
இதையடுத்து இந்த தம்பதி, அந்த ஸ்மார்ட்போன் சட்டபூர்வமாக வாங்கப்பட்டது என்றும், குற்றச் செயலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் வலியுறுத்தினர். பின்னர், வழக்கறிஞர் இது பற்றி ஹரே ஸ்ட்ரீட் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு பவுபஜார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் தற்போது தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது முந்தைய முறையில் சேதமடைந்ததா, திருடப்பட்டதா அல்லது மறுபேக்கிங் செய்யப்பட்டதா என்பதற்கான ஆதாரங்களை தேடி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தனிப்பட்ட சம்பவமா அல்லது பயன்படுத்தப்பட்ட அல்லது திருடப்பட்ட போன்களை புதியதாக விற்பனை செய்யும் மோசடி கும்பலின் ஒரு பகுதியா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒரு பெரிய மோசடிக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அண்மையில் மக்கள் புதிய போன் என நம்பி பழைய போன்களை வாங்குகிறார்கள். ஆனால், அதன் பின்னணியில் ஏதும் தவறு இருந்தால், சட்டப்பூர்வமாக வாங்கியவர்களும் சிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Kolkata,West Bengal
July 11, 2025 6:37 PM IST
திருமண நாளில் மனைவிக்கு பரிசாக கொடுத்த ஸ்மார்ட்போன்… சட்ட சிக்கலில் வழக்கறிஞர்…! ஏன் தெரியுமா…?


